மன்னார் அமுதனின் “அன்னயாவினும்” – காட்சி விரிக்கும் கவிதைகள்! கவிஞர் .அஷ்ரப் சிஹாப்தீன்

மன்னார் அமுதனின் “அன்னயாவினும்” – காட்சி விரிக்கும் கவிதைகள்!

கவிஞர் .அஷ்ரப் சிஹாப்தீன்

 

 

அமுதனின் ‘அக்குறோணி’ கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள்கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதைநீங்கள் காண்பீர்கள்.

 

‘அன்னயாவினும்’ தொகுதியின் ஒரு சில கவிதைகளை மன்னார் அமுதன் அவ்வப்போது முகநூலில் இட்டு வந்த போது படித்திருக்கிறேன், அவரைப்பாராட்டியிருக்கிறேன்.

 

கவிதையை முழுமையாகத் தருவதில் அமுதன் முழுமையடைந்திருக்கிறார் எனச் சொல்வதில் எனக்குள் குழப்பங்கள் கிடையாது. ஒரு கவிதை தன்னைவெளிப்படுத்திக் கொள்ள எந்தப் பாணியை விரும்புகிறதோ எந்த வார்த்தைகளை விரும்புகிறதோ எந்தச் சொற்களை விரும்புகிறதோ அவைஅத்தனையையும் கொண்டதாக அமைவதே முழுமையான கவிதை. இந்த வகையில் ஒரு நல்ல கவிஞனாக அமுதன் முழுமையடைந்து விட்டார் என்றுசொல்வேன்.

 

இந்த முழுமை அவரது வாசிப்பாலும் வயதினாலும் உணர்வினாலும் அனுபவத்தினாலும் மாத்திரம் வந்திருக்கிறது என்பதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ளமுடியும். அதற்கும் மேலாக கவிதை என்பது என்ன என்ற நிறைவான சிந்தனையும் உணர்வும் புரிதலும்தான் அந்த முழுமைக்குக் காரணம் என்று சொல்லமுடியும்.

 

தன்னைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் எவ்வாறு முழுமை பெறுவதில்லையோ அப்படியேதான் கவிதை என்ற கலை வடிவமும். எல்லாக் கலைவடிவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு கலை வடிவம் அதன் நேர்த்தியால், வடிவத்தால் அழகும் பொலிவும் பெறுகிறது. அந்த நேர்த்தியையும் அழகையும்கவிதையில் கொண்டு வருவதற்கு கவிதை என்றால் என்ன என்ற ஆழ் உணர்வும் ரசனையும் கவிஞனுக்கு இருக்க வேண்டும். அது மன்னார் அமுதனுக்குஇருக்கிறது.

 

00

 

இந்தத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது எந்தக் கவிதையில் ஆரம்பித்துப் பேசுவது என்கிற பெரிய சவாலைத்தான் நான் எதிர் கொண்டேன்.அவ்வப்போது நான்கு கவிதைகளைப் படிப்பதும் மூடிவைப்பதுமாகக் காலத்தைக் கடத்தியபடியே இருந்தேன்.

 

இந்தக் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையை, அதன் போக்கை, அதன் சவால்களை, அதன் ஆபத்துக்களைத்தான் மொத்தமாகப் பேசுகின்றன. ஆனால்எந்தவொரு பக்கத்துக்கும் சாராமல், வலிந்து இழுக்காமல் , மனம் போன போக்கில் போகாமல் ஒரே நேர் கோட்டில் இவை பயணம் செய்கின்றன. ஒருஇலங்கையனாக, ஒரு சிறுபான்மையினனாக, ஒரு தமிழனாக, ஒரு இலக்கியவாதியாக, ஒரு வடபுலத்தானாகவெல்லாம் இக் கவிதைகளில் தோற்றம்தருகிறார் அமுதன். ஆனால் எந்தப் பக்கமும் தூக்கலாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.

 

சொற்களைக் குளிர் நீரில் துவட்டிச் ‘சுள்’ளென வலிக்க அடிக்கும் அழகில் இக்கவிதைகள் குளித்து நிற்கின்றன. கிண்டலாகட்டும் கோபமாகட்டும் அழுத்திச்சொல்வதாகட்டும் – எதுவாக இருந்த போதும் அதற்கென காரமான, ரௌத்ரமான எந்தச் சொற்களும் இக்கவிதைகளில் கிடையாது. ஒரு சாதுவைப் போலஎழுந்து நடக்கும் இக்கவிதைகள் சில இடங்களில் மின்மினிப் பூச்சிகள் பறக்கும் அளவுக்கு ஓங்கி அறைந்து விட்டுச் செல்கின்றன.

 

‘காடு பிடித்திருக்கிறது

இங்கு

ஆத்திரத்தைக் காட்டவும்

அறைந்து சாத்தவும்

கதவுகள் இல்லை!”

(காடு பிடித்தல்)

 

‘நீங்கள்தான்

போதி மரப் புத்தனையும்

சிலுவை மர இயேசுவையும்

பிரசவித்ததாய்க்

கூறித் திரிபவர்களாயிற்றே!’

(தீர்ப்புக் கூறிகள்)

 

‘கிறீஸ் பேய்கள்

கொண்டு சென்ற இரத்தத்தில்

அவர் படித்திருக்கலாம் –

இரத்தம் ஒரே நிறமென்பதை!’

(புத்தனின் சொற்கள்)

 

மேலே நான் தந்திருப்பவை தனித்துப் பார்த்தாலும் அதிர்வு தரும் கவிதைத் துளிகள். ஆனால் கவிதையை முழுமையாகப் படிக்கும் போது இவற்றின்தாக்கம் வலிமை மிக்கதாக இருக்கும்.

 

சில கவிதைகள் ஒரு முழுத் திரைப்படத்தைப் போல மனதுக்குள் காட்சிகளை விரிக்கின்றன. அவ்வாறு விரித்து விட்டு வெறுமனே அவை கடந்துபோய்விடுவதில்லை. அவை நமக்கு எதையோ உணர்த்திவிட்டுச் செல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘மன்னரின் நகர் வலம்’ என்ற கவிதையைஉதாரணத்துக்கு எடுத்துக் காட்ட முடியும். அதிகாரத்தைக் கொண்டு எதையெதையால்லமோ அலங்கரிக்க முடியும். எதையெதையெல்லாமோ சாதிக்கமுடியும். ஆனால் மக்களின் மனங்களை வெல்லுவது சாத்தியமற்றது என்பதை மிக அழகிய முறையில் சொல்லிச் செல்கிறது இந்தக் கவிதை. ‘அழிப்பதும்பதிப்பதும்’, ‘ஆல முடிகண்டன்’, ‘அந்த ஒருவன்’ போன்ற கவிதைகள் கதையாயும் காட்சியாயும் விரியும் அழகு ரசிக்கத்தக்கது!

 

எல்லாக் கவிதைகளிலும் கவிஞனின் செய்தி ஒன்றிருக்கிறது. சிலவற்றில் நேரடியாகவும் சிலவற்றில் மறைவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.மாற்றியமைத்தலுக்கான கோஷமாக அல்லாமல் ஒரு எழுந்தமானத் தகவல் போல அச்செய்தி கவிதையுடன் இழையோடுகிறது. கவிஞனின் பார்வையும்கவிதை சொல்லும் முறையும் மனச்சாட்சியின் தராசு முள்ளில் அமர்ந்திருக்கிறது. ஆயினும் சரியானது எது என்பதை கவிதை சொல்லப்படும் விதத்தின்மூலம் அமுதன் வாசகனுக்கு உணர்த்தும் திறமையையும் நுட்பத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

 

00

 

பிரபல்யமும் விளம்பர ஆடம்பரமும் கொண்டபடி தென்னிந்திய இலக்கிய மாபியா முதலாளிகள் நடத்தும் சஞ்சிகைகளில் கவிதை என்ற பெயரில் வரும்வான்கோழி எழுத்துக்களின் வாலில் தொங்கிக் கொள்வதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டிருக்கிறார் அமுதன். அவற்றை அவர் உள்வாங்கியிருந்தாலும்கூட யாராலும் கவனிக்கப்படாத, இலக்கிய மாபியா முதலாளிகளின் அருட் கடாட்சம் படாத அல்லது அந்த வலைக்குள் அகப்படாத, அகப்பட விரும்பாதஅற்புதமான கவிதைகளைத் தரும் கவிஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் கவிதைகளைப் படித்து – பாலை மட்டும் உறிஞ்சியெடுக்கும் அன்னம்போல அமுதன் ஆகிவிட்டிருக்கலாம் என்பது எனது முடிபு.

 

ஒரு சிறந்த படைப்பாளிக்குத் தெளிவுதான் முதலில் தேவைப்படுவது. தெளிவு கொள்ளும் அளவு படைப்பாளி தெளிந்திருக்கிறான் என்றால், தன்னைஅறிந்திருக்கிறான் என்றால் எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்கிற வித்தை கைகூடிவிடும். எந்த வார்த்தை மந்திர வார்த்தை என்பது புரிந்து விடும்.அந்தத் தெளிவை அமுதன் பெற்றிருக்கிறார் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

 

தெருவில் கிடக்கும் நீரில் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் வெறும் மண்ணில் வானம் தெரிவதில்லை. விளம்பரங்களாலும் நவீனம் என்ற பெயராலும்மண்ணில் பார்க்கப்படும் வானத்தின் அழகு சோபிப்பதில்லை. காரணம், அதில் உண்மை இல்லை. உண்மை இல்லாதவை மக்களின் ரசனைக்குஉட்படுவதுமில்லை. இந்த நிலைக்குள் தள்ளப்பட்டு விடாமல் தனது சாதாரண வார்த்தைகளை வெகு சரளமாககக் கவிதைகளில் பயன்படுத்தி மெல்லியபோக்குடன் தெளிந்த நீரோட்டம் போல கவிதைகளைத் தந்திருக்கிறார் அமுதன்.

 

மிக அண்மையில் நான் படித்து மகிழ்ந்த தொகுதி என்று இந்தக் கவிதைத் தொகுதியை கவிதை பயிலும் இளந் தலைமுறைக்கு நான் சிபார்சு செய்யவிரும்புகிறேன்.

 

– அஷ்ரஃப் சிஹாப்தீன்

மன்னார் பெனிலின் போருக்குப் பின்னரான சமகால யதார்த்தத்தைச் சித்தரிக்கும் கவிதைகள் – அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்

மன்னார் பெனிலின் போருக்குப் பின்னரான

சமகால யதார்த்தத்தைச் சித்தரிக்கும் கவிதைகள்

                                                        –      அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்

முன்னுரை

 மனதைப் பாதிக்கும் ஒரு சிறு சம்பவம்கூட கலையாக, இலக்கியமாக உருவெடுக்கலாம். ஒவ்வொரு நாளும் பலவித இன்பியல் அல்லது துன்பியல் நிகழ்வுகளை மனிதன் கடந்து செல்கிறான். இவற்றை வெற்றிகரமாக எழுத்தில் வார்ப்பது என்பது ஒரு படைப்பாளியின் தனித்திறமையைப் பொறுத்த விடயமாகும்.

  இக்கவிதைத் தொகுதியில் சிறியதும் பொpயதுமாக 45 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கவிதைகள் போருக்குப் பின்னரான தமிழர்களின் வாழ்வியல் அவலங்களைப்பற்றிப் பேசுகின்றன. சமகால அவலங்களைப் பேசினாலும் கவிஞர் விரக்தியடையாமல், நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறார் என்பதை இந்நூ}லின் தலைப்பினூடாகத் தெரியப்படுத்துகிறார். ஆம், ஈர நிலத்தை அவர் எதிர்பார்த்திருக்கின்றார். நம்பிக்கைதானே வாழ்க்கை!

“இருளை விரட்ட முடியாவிட்டாலும்

இருள்படிந்த கொடூர முகங்களைப்பற்றி

உங்களிடம் சின்னதாய்

உணர்வை விதைக்கலாமமென

வந்துள்ளேன்.”

என தனது நோக்கத்தை முன்வைத்து பெனில் தனது கவிதைகளைத் தந்துள்ளார்.

போருக்குப் பின்னரான சூழ்நிலைகள்

 ஈழ மண்ணில் போர் நடைபெற்ற காலங்களில் போர்க்காலக் கவிதைகள் பல மேலெழுந்தன. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின்னா; – இப்போது போருக்குப் பின்னரான காலத்துக் (Pழளவ – றயச Pநசழைன) கவிதைகள் மேலெழுந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் “ஈர நிலத்தை எதிர்பார்த்து” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பும் முக்கியமானதாக அமைகின்றது.

“சாட்சியங்களை அழிப்பதனால்

நடந்தவை இல்லையென்றாகிவிடாது.

குரல்வளைகளை நொpப்பதனால்

உண்மைகள் ஊமைகளாகிவிடாது

ஒருநாள் விடிவு வரும்

அப்போது நீ செய்த கொடுமைகளுக்கான

முடிவை எழுதும் ஒரு நல்ல பேனா

அதுவரை ….”

என்ற கவிஞரின்ன் வார்த்தைகள் போருக்குப் பின்னரான ஈழத்து மக்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடாக அமைகின்றது.

தேன்வதை திருடிய வஞ்சகன்’ என்ற கவிதையில் தேனீக்களாக ஈழத்தமிழரும், அத்தேனீக்களை அழிக்க முனைந்து முதலில் தோற்றுப்போன கரடிகளாக இலங்கை இராணுவமும், கரடி கூட்டுச்சோ;ந்த வேடனாக அந்நிய நாடுகளும் உருவகப்படுத்தப்படுகின்றன. ஈற்றில் இலங்கை இராணுவம் தமிழா; தாயகத்தில் நிலைகொண்டுள்ள நிலைமையை கவிஞர் இப்படிக் கூறி தன் கவிதையை முடிக்கின்றார்.

“தேனைத் தின்ற கரடி அத்தோடு நின்றுவிடவில்லை.

அந்த மரத்தடியிலேயே இன்று தங்கிவிட்டது”.

  யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் இந்த எலும்புக்கூடுகளுக்கும் தொடா;பு இருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் ஒரு சூழ்நிலையில் எலும்புக்கூடுகள் பற்றிய இக்கவிதை இவ்வாறு நிறைவுபெறுகின்றது,

“தோண்டி எடுப்பதை விட்டுவிட்டு

தோண்டி எடுத்த எச்சங்கள்

யாருடைய சதியால் வீழ்ந்ததென்ற

பின்புலத்தைத் தோண்டுங்கள்

ஏதாவது வெளிவருகிறதா எனப் பார்ப்போம்”

   போருக்குப் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களைப்பற்றிக் கூறும் கவிஞர்,

“இருந்த இடம் தெரியவில்லை

இருந்தும் நாம் கடந்துபோகையில்

நின்று தலைவணங்க மறந்ததில்லை” என்கிறார்.

  படையினரால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட தனியார் காணிகளின் நிலையை கவிஞர் அழகாக இப்படி எடுத்துரைக்கின்றார்.

“ஏர் பூட்ட மாடு இருக்கு

காணி பூமி அதுவும் இருக்கு.

உழுவதற்கு ஆழும் இருக்கு

விதைநெல்லை வீசியெறிந்தால்

பலனை அள்ளித்தர விளைநிலம் காத்திருக்கு

இத்தனைக்கும் தடையாக

கொமாண்டோ கம்பி வேலியிருக்கு”

தமிழ் இளைஞர்களைப் பொறுத்தவரை சிறைக்குள் இருக்கும் பாதுகாப்பு சிறைக்கு வெளியே இல்லை என்ற கசப்பான உண்மையை ‘பீதியுடன் பாதி நாட்கள்’ என்ற கவிதை சிறப்பாகச் சொல்கிறது.

“முட்கம்பி முகாமிற்குள்ளிருந்து விடுதலையாகி

தம் சொந்த ஊருக்குப் போகப்போவதை எண்ணி

கோழிக்குஞ்சுகளுக்கோ எல்லையில்லா ஆனந்தம்.

தாய்க்கோழிகளுக்கோ உள்ளகப் பதைபதைப்பு.

இங்கு இருந்த காவல் அங்கு அவர்களுக்கு

இருக்காதே என்றெண்ணி.

காரணம் கூட்டுக்குள்ளிருந்தால்

குறிவைக்க முடியாதே என்று

வெளியில்விடும் வேட்டை மிருகங்களை நினைத்து.”

  தூங்குவதற்குத்தான் தாலாட்டுப் பாடுவார்கள். இங்கே தூங்கவேண்டாம் எனச் சொல்லி கவிஞர் தாலாட்டுப் பாடுகின்றார். இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனிதப் பேரவலங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி ‘தமிழ் மகனே தூங்கிடாதே’ எனக் கூறுகின்றார்.

சமூக சீர்கேடுகள்

சில கவிதைகள் சமூகச் சீர்கேடுகளைப்பற்றி பேசுகின்றன.

‘சிறுவா; துஷ்பிரயோகம்’ இன்று நமது சமூகங்களில் அதிகம் பேசப்படுகின்ற முக்கிய சமூகப் பிரச்சினையாக உள்ளது. இன்றைய சமூகத்தீமைகளில் ஒன்றான இவ்விடயத்தையும் கவிஞர் தனது கவிதையின் பாடுபொருளாக்கியுள்ளார். ‘வாராயோ வல்லோனே’ என்ற கவிதையில்,

“பிஞ்சுகளை பஞ்சணைக்கிழுத்து

வஞ்சனை செய்வோரை வதம் செய்ய …

காக்கவேண்டிய வேலியே

கசக்கிப் பிழியும் இழிசெயல் செய்வோரை

இல்லாது ஒழித்திட …

பள்ளிசெல்லும் பிள்ளைகளை

ஆசானென்ற போர்வையில்

ஆபாசம் புரிந்து அநியாயம் செய்யும்

பாதகர்களை வதம்செய்ய

வரவேண்டும் நீ வரவேண்டும்”

 பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோரின் பாpதாப நிலை இன்று சமூகத்தின் அக்கறைக்குரிய விடயமாக மாறியிருக்கின்றது. பிள்ளையால் கைவிடப்பட்ட ஒரு தாயின் உணா;வலைகளை கவிஞர் இப்படிச் சொல்கிறார்,

“உழைத்துத் தேய்ந்த உன் செருப்புக்கூட

உன் வீட்டு வாசலில்

நிம்மதியாய் ஓய்வெடுக்கையில்

இடுப்புவலியெடுத்து உனைப்பெற்ற நானோ

நடுத்தெருவில் நாதியற்று”

உருவகங்கள்

பல கவிதைகளில் உருவகங்கள் காணப்படுகின்றன. ‘மணிமுடியின் கெடுபிடி என’ற கவிதை இப்படி ஆரம்பிக்கின்றது,

“வெட்டுக்கிளிகளை வேட்டையாட

ஊருக்குள் யாரோ

அத்துமீறிப் புகுந்துவிட்டதாய் பொய்சொல்லி

சிட்டுக்குருவிகளை குறிவைக்கின்றன

வெட்டுக்கிளிகள்”

  இங்கே இலங்கை இராணுவத்தினா; வெட்டுக் கிளிகளாகவும், தமிழ் இளைஞர் இளைஞிகள் சிட்டுக்குருவிகளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனா;.

‘கொஞ்சக் காலம்தான்’ என்ற உருவகக் கவிதையில் தாய் மண்ணில் நிலைகொண்டுள்ள அந்நியப் படைகள் விரைவில் இல்லாமல்போகும் என்ற நம்பிக்கையை கவிஞர் இவ்வாறு முன்வைக்கின்றார்.

“ஒருநாள் விடியும்

எம்மவாpன் குருதி அமில மழையெனப் பொழியும்.

அன்றோடு கள்ளிச்செடியும் கற்றாளையும்

இல்லாதொழிந்துபோகும்.

குள்ளநாpக்கூட்டம் ஊரைவிட்டு ஊழையிட்டோடும்.”

இவ்வாறு இன்னும் பல உருவகங்களை இந்நூலில் காணலாம்.

சில குறிப்புகள்

  இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்ற கவிதைகளில் சிறப்பானவை மட்டுமே இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சிறப்பானவற்றை வெளிக்கொணர்ந்து பாராட்டுவதோடு ஏனையவை பற்றிய மதிப்பீட்டை, சில குறிப்புகளை முன்வைப்பது கவிஞரின்ன் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

 சில கவிதைகளில் ‘கவித்துவம் குறைந்து ‘வசன சாயல்’ மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. எதிர்காலத்தில் கவிஞர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுப்பது நன்று. வசன சாயலைத் தவிர்த்து கவித்துவம் நிறைந்த கவிதைகளை நாம் படைக்கவேண்டுமாயின் தரமான பல கவிதை நூல்களை வாசிக்கவேண்டும். தொடா;ச்சியான வாசிப்பு நமது கவித்துவ ஆழுமையை விசாலமாக்கும் என்பது திண்ணம்.

 உருவகங்கள் கவிதைக்கு அழகைக் கொடுக்கின்றன என்பது உண்மை. ஆனால் அளவுக்கு அதிகமாக – பல கவிதைகளில் உருவகங்களைப் பயன்படுத்துவது வாசகருக்குச் சலிப்பை ஏற்படுத்தக்கூடும். பல கவிதைகளில் பறவைகள், மிருகங்கள் உருவகமாகக் கையாளப்பட்டுள்ளன.

நிறைவாக

  போருக்குப் பின்னரான சமகால யதார்த்தங்களை வெளிப்படுத்தவேண்டும் என்ற கவிஞரின்ன் ஆர்வம், ஆதங்கம் பாராட்டப்படவேண்டியதே. அதிலும் உருவகங்கள், குறியீடுகள் மூலம் தனது எண்ணங்களை வெளிப்படுத்த விளைவது மகிழ்ச்சிக்குரியதே. ஆயினும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் எந்த அளவுக்கு வெற்றிபெற்றுள்ளார் என்பது ஆய்வுக்குரியது.

   இலக்கியங்கள் ஏற்றமும், எழிலும் பெற்றுக் காலங்களைக் கடந்தும், கருத்துக்களைக் கடந்தும் அழியாமல் என்றும் நிலைபெற்று விளங்குவன. கூறும் கருத்தால் மட்டுமன்றி, உணர்த்தும் திறனாலும் அவை உயிர்பெற்று, உயர்வு பெற்றுத் திகழ்வன. “கருத்தை ஒட்டியே மொழி நடை அமைகிறது. அவரவா; மனப்பண்புக்கும் தன்மைக்கும், கல்விப் பயிற்சிக்கும் முயற்சிக்கும் ஏற்றவாறு மொழிநடை இருக்கும். இலக்கணம் இலக்கியம் நன்கு கற்றுவிடுவதாலே மட்டும் நல்ல மொழிநடை அமைந்துவிடுவதில்லை” (அ. கி. பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, ப. 384) என்பர். இந்த அடிப்படையில் இக்கவிதைத் தொகுப்பில் கவிஞரின்ன் மொழிநடை அவருக்கே உரித்தான தனித்துவத்தோடு விளங்குகிறது.

  “புதுக்கவிதைக்கெனத் தனி உருவம் இல்லை. கவிஞர்களின் தனித்தன்மைக்கும் மனவளத்திற்கும் ஏற்ப உருவங்கள் மாறுபடுகின்றன. அதற்கேற்ப புதுக்கவிதையின் மொழிநடை அமைகிறது” (ச. கலைச்செல்வன், புதுக்கவிதை நடையியல் ஆய்வு, ப.123) என்ற வார்த்தைகள் இக்கவிதைகளையும், இக்கவிஞரின்ன் மொழிநடையையும் புரிந்துகொள்ள நமக்கு உதவியாக உள்ளன.

  இது கவிஞர் பெனிலின் இரண்டாவது நூல்.  பெனிலின் கவிதையாக்கங்கள் தொடரவேண்டும்,  இன்னும் சிறப்பான கவிதைகளை அவர் எதிர்காலத்தில் தரவேண்டும் என ஆசித்து வாழ்த்துக்கள் கூறுகின்றேன்.

க.பேரின்பதாசனின் ‘நந்தவனச் சுகந்தம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

மன்னார் கல்வித் திணைக்களத்தில் பணிபுரிந்த முன்னாள் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.பேரின்பதாசனின் மன்னார் தமிழ்ச்சங்க வெளியீடான ‘நந்தவனச் சுகந்தம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக மன்னார் ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.றெவல், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.சியான், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் மாலினி வெனிற்றன், மாகாண கல்வி பண்பாட்டுத்துறை அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், மடு ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜி.ஜேக்கப், ஓய்வுநிலை கணக்காளர் ஏ.ஆபிரகாம் சோசை, மன்னார் முன்னாள் நகரபிதா எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கான வரவேற்புரையை மன்னார் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் பு.மணிசேகரன் வழங்கினார். இக்கவிதை நூலுக்கான நயவுரையை ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் அ.அந்தோனிமுத்து வழங்கினார்.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வந்துள்ள இக்கவிதை நூலின் பாடுபொருள் பன்முகப்பட்டதாக உள்ளது. நூலாசிரியர் பேரின்பதாசன் பல காலமாக பல்வேறு பத்திரிகைகளில் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முப்பரிமான நூலகக் கண்காட்சி

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நூலக விழிப்புணர்வு நிறுவகம் நடாத்தும் மாபெரும் 5 நாள் (9,10,11,12,13 – 07-2015) முப்பரிமாண நூலகக் கண்காட்சி மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இன்று (09/07/2015) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் தமிழ்ச்சங்க தலைவர் பிரம்மஸ்ரீ மஹா தர்மகுமார சர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக மன்னார் நகர பிரதேச செயலாளர் திரு.கே.எஸ்.வசந்தகுமார் கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.சிவசம்பு கனகாம்பிகை, நூலக நிறுவன தலைவர் செல்வி.ஸ்ரீகாந்தலக்ஸ்மி அருளானந்தம், மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகர் மற்றும் மன்னார் மாவட்ட தேசிய, மாகாண பாடசாலைகளின் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு 10,11,12,13 /07/2015 (ஐந்து நாட்கள்)ஆகிய ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கனிஸ்ட, சிரேஷ்ட, புலமைப்பரிசில் மாணவர்கள் நூலகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடைவார்கள் என மன்னார் தமிழ்ச்சங்கம் எதிர்பார்ப்பதாக பொதுச்செயலாளர் மன்னார் அமுதன் தெரிவித்தார்.

மன்னார் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு

05.08.2015
அன்புடையீர்,

மன்னார் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டத்திற்கான அழைப்பு
22.08.2015 காலை 10.00 மணி, கலையருவி மண்டபம்

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பெருமதிப்பிற்குரிய உறுப்பினராகிய உங்களுக்கு எமது செந்தமிழ் வணக்கம். மன்னார் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளில் தாங்கள் ஆற்றிவரும் இடையுறாத தமிழ் பணிக்கு எமது நன்றிகள். எதிர்வரும் 22.08.2015 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கலையருவி, இல: 116ஃ3, புனித ஜோசப் வீதி, பெட்டா, மன்னார் எனும் முகவரியில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

தமிழ்ச்சங்க வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தும் விதமாகவும், தங்களின் மேலான ஆலோசனைகளோடு யாப்பில் சில சீர்திருத்தங்களை உருவாக்குவதற்கும், தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் சங்கம் சார்ந்த கடமைகள், உரிமைகள், சலுகைகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் சாதாரண உறுப்புரிமையை பெற்று இதுவரை புதுப்பிக்காத உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 10.00 மணி வரை புதுப்பிக்க இயலும். உறுப்புரிமையை புதுப்பிக்காத உறுப்பினர்கள் உறங்குநிலை உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் மொத்த தொகையைச் செலுத்தி தங்கள் உறுப்புரிமையைப் புதுப்பித்தால் மட்டுமே பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதையும் தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம்.

அத்துடன் உறுப்புரிமையைப் புதுப்பித்த உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டிலுள்ள ஆயுள் கால உறுப்பினர்களின் எண்ணிக்கையே தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையாகக் கருத்திற்கொண்டு இக்கூட்டமும் எதிர்காலத் தொடர்பாடல்களும் நடைபெறும் என்பதையும், சங்கம் தற்பொழுது சிறந்த நிதிநிலையைப் பேணிவருகிறது என்பதையும் தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைக்க விரும்புபவர்கள் மன்னார் தமிழ்ச்சங்க இணைய தளத்தில் உள்ள உறுப்புரிமைப் படிவத்தை பதிவிறக்கம் செய்து ஆர்வமுள்ளவர்களை இணைக்கலாம். இணையதள முகவரி: http://mannartamilsangam.com/

அனைத்து உறுப்பினர்களும் முகப்புத்தகத்தில் உள்ள மன்னார் தமிழ்ச்சங்க மூடிய குழுவில் இணைவதன் மூலம் சங்க நடவடிக்கைகளை உடனுக்குடன் அறியவும், உங்கள் பெறுமதி வாய்ந்த கருத்துக்களைத் தெரிவிக்கவும் முடியும். முகவரி: https://www.facebook.com/groups/thamilsangammannar/

மன்னார் தமிழ்ச்சங்க செயற்பாடுகள் குறித்த குறுந்தகவலை உங்கள் அலைபேசிகளில் இலவசமாகப் பெற: Follow mnrtlsm என தட்டச்சு செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

சமூகப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் உங்களின் வருகையை எதிர்பார்ப்பதோடு, இதுதொடர்பாக தாங்கள் மேற்கொள்ளும் சகலநடவடிக்கைகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ்ப்பணியில்

மன்னார் அமுதன்                                             பிரம்ம ஸ்ரீ தர்மகுமார குருக்கள்
பொதுச்செயலாளர்                                           தலைவர்
மன்னார் தமிழ்ச்சங்கம்                                    மன்னார் தமிழ்ச்சங்கம்

நேரமுகாமைத்துவமும் பொறுப்புணர்வும்

நேரமுகாமைத்துவமும் பொறுப்புணர்வும்
                             – அருட்திரு தமிழ் நேசன்

“எனக்கு நேரமில்லை!” அல்லது “எனக்கு நேரம் போதாது!” என்பதுதான் பலருடைய வாயிலிருந்துவரும் வழமையான ‘பல்லவி’. மற்றவர் நம்மைவிடப் புத்திசாலியாக இருக்கலாம், நம்மைவிட அழகுள்ளவராக இருக்கலாம், நம்மைவிட சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம், நம்மைவிடப் பணக்காரராக இருக்கலாம். ஆனால் யாரிடமும் நம்மிடம் உள்ள நேரத்தைவிட அதிகமான நேரம் இருக்கமுடியாது; குறைவான நேரமும் இருக்க முடியாது. நம் எல்லோருக்கும் ஒரு வாரத்திற்கு 168 மணித்தியாலங்கள் சமனாகத் தரப்பட்டிருக்கிறது. அது ஏழு 24 மணித்தியாலங்களாகப் பிரித்துத் தரப்பட்டிருக்கிறது.

இறைவன் நமக்குப் பொருள், பண்டம், சொத்து சுகம் என்று பலவற்றைத் தராமல் இருக்கலாம்; அல்லது குறைவாகத் தந்திருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் இறைவன் சமமாகத் தந்திருக்கும் ஒரு கொடை உண்டென்றால் அதுதான் நேரம் என்னும் அருங்கொடை!

வாழ்க்கை நேரத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் கூறுகிறார், “நீ வாழ்க்கையை நேசிக்கிறாயா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதே. ஏனெனில் வாழ்க்கை நேரத்தினால் உருவாக்கப்பட்டிருக்கிறது”. நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் கண்ட முன்னோடிகள் பலர். நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் பொறுப்புணர்வோடு, திறமையோடு பயன்படுத்தியவர்களே பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். இவர்களைத்தான் வரலாறு இன்றுவரை நினைவுகூர்கிறது. நேரத்தை யார் யாரெல்லாம் சரியாகப் பயன்படுத்தினார்களோ அவர்களே சாதனையாளர்களாக, அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, நாட்டை ஆளும் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். “உனக்கு நேரத்தின் மதிப்புத் தெரியுமானால் வாழ்வின் மதிப்பும் தெரியும்” என்கிறார் ஒரு அறிஞர்.

நேரம்! பணத்தைவிட மதிப்புள்ளது!

நமது நேரம் பணத்தைவிட அதிக மதிப்புள்ளது. நாம் பணத்தைச் சம்பாதிக்க முடியும். ஆனால் நேரத்தை உருவாக்க முடியாது. “ஒரு அங்குலம் தங்கம், ஒரு அங்குல நேரத்தை வாங்க முடியாது.” எனச் சீனப் பழமொழி ஒன்று கூறுகிறது.

“நீங்கள் காலையில் எழுந்தவுடன்; உங்கள் பேர்சைத் திறந்து பார்த்தால் அதில் 24 மணி நேரம் நிரப்பப்பட்டிருக்கும். உங்கள் உடமைகளில் அது அதிக மதிப்பை உடையது. இயற்கை அதனை ஒரு தனிப் பொருளாக உங்கள்மீது பொழிந்துள்ளது. அதனை உங்களிடமிருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. அது திருட முடியாதது. மற்ற அனைவரும் நீங்கள் பெற்றுள்ள அளவைத்தான் பெற்றுள்ளனர்.”

நாம் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வாழ்ந்தாக வேண்டும். அந்த நேரத்திற்குள்தான் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்பமாக வாழவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். மனத்திருப்தி அடைய வேண்டும். மதிப்புப் பெறவேண்டும். அழிவில்லாத ஆன்மாவை வளர்க்க வேண்டும்.

“ஒரு நாளைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த நாளை இழக்காமல் இருக்க முடியும்.” என்பார்கள். நேரத்தின் பெறுமதியை அறிந்த பெரியோர்கள் ‘நேரம் பொன் போன்றது’ எனக் கூறியுள்ளனர். ஆனால் “நேரம் உயிர் போன்றது” எனக்கூறுவதே பொருத்தமாகும.; ஏனெனில் பொன்னை இழந்தால் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்தால் திரும்பப் பெறமுடியுமா? ஆகவே “நேரம் உயிர் போன்றது” எனக் கூறுவதே பொருத்தமாக இருக்கும். கிடைக்கும் பணத்தில் எப்படி வாழ்வது என்பதைவிட கிடைக்கும் நேரத்தில் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியம்.

செய்ய வேண்டியவைகளைப் பின்போடுதல்!

இன்றைய பணியை ‘நாளைக்கு’ என ஒத்திவைப்பதால் நமது பணிச்சுமையை அதிகரித்துக்கொள்கிறோம். செய்யவேண்டியவைகளைப் பின்போடுதல் அல்லது காலத்தை ஒத்திப்போடுதல் என்பது சென்ற வாரத்தின் பணிகளை இன்று செய்ய முயற்சிக்கின்றோம் என்று பொருள்கொள்ளலாம்.

“காலதாமதம்தான் நேரத்திருடன்” என்று ஒரு பழமொழி கூறுகிறது. காலதாமதத்தை (பின்போடுவதை) நமது வாழ்விலிருந்து அகற்றிவிட்டால் நாம் சிறந்த நேரநிர்வாகி ஆகிவிட முடியும். காலதாமதம் நம்மைக் களவாட நாம் அனுமதிக்கக்கூடாது. “இன்று ஒரு நாள் என்பது இரண்டு நாளைகளுக்குச் சமன்” என்ற பிராங்கிளின் வார்த்தைகளை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். “இன்றே உங்களால் செய்யமுடிந்ததை ஒருபோதும் நாளைவரை தள்ளிப்போடாதீர்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

ஜேம்ஸ் அல்பா (1838 – 1889) என்பவனைப்பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. அவன் வாழ்வில் எதையும் சாதிக்கவில்லை. தன்னைப் பற்றியும் எழுதிவைக்கவில்லை. ஆனால் இந்தக் ‘காலதாமத மன்னனைப்’ பற்றி அறிந்த யாரோ ஒருவர் அவனைப்பற்றி கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“அவன் நிலவின்கீழ் நன்றாகத் தூங்கினான். அவன் சூரியனின்கீழ் படுத்துக்கிடந்தான். அவன் ‘செய்து விடுவோம்’ என்று வாழ்வை வாழ்ந்தான். ஆனால் எதையும் செய்யாமல் இறந்தான்”.

“இது இப்படி இருந்திருக்கலாம்”, “நான் இதைச் செய்திருக்க வேண்டும்”, “நான் இதைச் செய்திருக்க முடியும்”, “இதை மட்டும் நான் செய்திருந்தால்”, “நான் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிக முயற்சி எடுத்திருந்தால்”, “என்றாவது ஒருநாள் நான் இதைச் செய்வேன்” போன்ற வார்த்தைகள் வருந்தத்தக்க வார்த்தைகளாகும். இவை “காலம் கடந்த ஞானம்” ஆகும். பலர் இப்படியே சொல்லிச் சொல்லியே தமது வாழ்க்கையை முடித்துக்கொண்டு எதையும் சாதிக்காமல் ‘போய்’ விடுகிறார்கள்.

காலதாமதம் ஒரு பொறுப்பற்ற செயல்!

சிலர் எப்போதும் காலதாமதமாகவே வருவார்கள். நேரத்தைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கு இராது. காலதாமதமாக வருவதையிட்டு அவர்களுக்கு கொஞ்சம்கூட வருத்தம் இருக்காது. ஏன் காலம்தாமதித்து வருவது அவர்களுக்கு ஒரு பழக்கதோஷமாகவே மாறிவிடுகின்றது.
நேர நிர்வாகம் பிறருடன் தொடர்புடையது. ஏனெனில் நாம் தனித்து இயங்குவதில்லை. பிறரைக் காத்திருக்கும் சூழலுக்கு ஆளாக்கும்போது நாம் நமது நேரத்தை மட்டுமல்லாமல் பிறருடைய நேரத்தையும் வீணாக்குகிறோம் என்பதை பல சமயங்களில் உணர்வதில்லை. உதாரணமாக, 50 நபர்கள் கூடியுள்ள ஒரு கூட்டத்திற்கு 5 நிமிடம் நாம் காலதாமதமாகச் சென்றால் நம்முடைய 5 நிமிடத்தை மட்டுமன்றி கூடியுள்ள 50 நபர்களின் (50 x 5 = 250 நிமிடங்கள்) நேரத்தையும் வீணாக்குகிறோம் என்ற உணர்வு நம்மில் எழவேண்டும்.

“மூன்று மணி நேரம் முன்பு சென்றாலும் செல்லலாம். ஆனால் ஒரு நிமிடம்கூட தாமதமாக்கக் கூடாது” என்கிறார் நெல்சன். நேரம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும் என்பது பல நல்ல தலைவர்களின் கூற்று.

வந்தவர்களைக் காக்கவைக்கும் நிலை!

உரிய நேரத்திற்கு வந்தவர்களைக் காக்கவைத்துவிட்டு, வராதவர்களை – காலம் தாழ்த்தி வருபவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலைமை பல இடங்களில் உள்ளது. நேரத்தை மதித்து, உரிய நேரத்திற்கு செல்லவேண்டும் என்று ‘அடித்துப் பிடித்துக்கொண்டு’ உரிய நேரத்திற்கு வந்தவர்களைப்பற்றி, அவர்களின் ‘நேரம் தவறாமை’யைப்பற்றி விழா ஏற்பாட்டாளர்கள் கண்டுகொள்வதில்லை. உரிய நேரத்திற்கு வராமல் – நேரத்தைப் பற்றிய எந்த சிரத்தையும் இன்றி ஏனோதானோ என்று, ஆற அமர வந்துகொண்டிருக்கும் சிலருக்காக விழா ஏற்பாட்டாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். இது நியாயமா?

வராதவர்களை மதித்து, அவர்கள் வரும்வரை 10 நிமிடங்கள், 20 நிமிடங்கள், 30 நிமிடங்கள் சிலவேளை 45 நிமிடங்கள், ஒரு மணித்தியாலம்கூட காத்திருக்கின்ற நிலமைகள் உள்ளது. வராதவர்களை மதித்து வரட்டும் என்று காத்திருப்பது சரி. சரியான நேரத்திற்கு வந்தவர்களைக் காக்க வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? குறிக்கப்பட்ட உரிய நேரத்திற்கு வருகைதருவது அழைக்கப்பட்டவர்களின் பொறுப்பு. குறிக்கப்பட்ட, உரிய நேரத்திற்கு நிகழ்ச்சியைத் தொடங்குவது அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு. ஆக நேரம் பற்றிய பொறுப்புணர்வு அனைவருக்கும் இருக்கவேண்டும்.

முடிவின்றித் தொடரும் கூட்டங்கள்!

அனேகமான கூட்டங்களில் தேவையற்ற பேச்சுக்களே மிகுந்திருக்கும். குறிப்பிட்ட கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டதென்பதை மறந்துவிட்டு சம்மந்தமில்லாமல் எதையெதையோ பேசிக்கொண்டு (அலம்பிக்கொண்டு) இருப்பார்கள். கூட்டம் என்ற சொல்லுக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
“முன்னேற்பாட்டின்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிருணயிக்கப்பட்ட காலநேரத்தில் சிலர்கலந்துகொண்டு செய்திப் பரிமாற்றமோ அல்லது செயல் தீர்மானமான முடிவோ செய்வதற்கெனக் கூடுவது.” கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்துபவர் ஒரு நடுநிலையாளராகவும், தலைவராகவும் பணியாற்ற வேண்டும். கூட்டத்தை குறித்த நேரத்தில் ஆரம்பித்து நிருணயித்த காலத்தில் முடிக்க வேண்டும். நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத தேவையற்ற பேச்சுக்களைக் கட்டுப்படுத்தி, கூட்டத்தை சுமுகமான முறையில் நடத்தவேண்டும். நேரம் பற்றிய பொறுப்புணர்வு தலைவருக்கும் இருக்க வேண்டும்; பங்கேற்பாளர்களுக்கும் இருக்க வேண்டும்.

பேசத்தொடங்கினால் முடிக்கமாட்டார்கள்!

சிலர்மேடையில் பேசத் தொடங்கினால், “அட இவரா….? இவர் துவங்கினா இண்டைக்கு முடிக்க மாட்டாரே… !” என்ற முணுமுணுப்புக்கள் சபையிலிருந்து கேட்கும். ஒலி வாங்கியைக் கையில் பிடித்தால் சிலருக்கு நேரம் போவதைப்பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார்கள். நேரத்தைப் பற்றிய எந்தப் பொறுப்புணர்வும் இன்றி பேசிக்கொண்டே போவார்கள். தன்னுடைய பேச்சை சபையோர் இரசித்துக் கேட்கிறார்களா இல்லையா என்பதுபற்றியெல்லாம் இவர்களுக்கு அக்கறையே இல்லை. “அதிக நேரம் பேசுகிறீர்கள். பேச்சை நிறுத்துங்கள்” என்ற அர்த்தத்தில் சபையோர் கைதட்டினால். “எனது பேச்சைப் பாராட்டி கைதட்டுகிறார்கள்” என பேசுகிறவர் நினைத்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிற ‘கண்ணுறாவி’ காட்சிகளை நாம் பல இடங்களில் காண்கிறோம்.

“தயவுசெய்து நிறுத்தவும்”, “உங்களுக்கான நேரம் முடிவடைந்துவிட்டது”, “உங்கள் உரையை சுருக்கமாக்கி முடிவுக்குக் கொண்டுவரவும்” என்று விழா ஏற்பாட்டாளார்கள் துண்டு எழுதிக்கொடுக்கவேண்டிய ‘தர்மசங்கடமான’ நிலைமைக்கு ஆளாகின்றார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான். எவ்வளவு சிறப்பான பேச்சாளராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பேசுவதை யாரும் விரும்பமாட்டார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல் தன்னுடைய நற்பெயரையும் கெடுத்து, ஏற்பாட்டாளர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகின்ற நிலமை எதனால் ஏற்படுகின்றது. பேசுகின்றவருக்கு நேரம் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமையால்தானே?

நேரத்தை ‘விழுங்கும்’ நவீன தொடர்புசாதனங்கள்!

இன்றைய நவீன தொடர்புசாதனங்களான தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, இணையம், கணனி விளையாட்டுக்கள், முகநூல் போன்றவற்றில் பலர்தங்கள் பொன்னான நேரத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசிகளின் அதீத பாவனையால் இன்று பலரது நேரம் வீணாகிக்கொண்டிருக்கிறது. காதலர்கள் தம்மை மறந்து மணிக்கணக்காக பேசி தமது நேரத்தை வீணாக்குவதோடு தொலைபேசி நிறுவனங்களுக்கும் அபரிதமான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றார்கள். இணயத்தளப் பாவனையாளர்கள் சிலர்பாலியல் படங்களைப் பார்ப்பதில் பல மணி நேரங்களைச் செலவிடுகின்றனர். இதேபோன்று கணனி விளையாட்டுக்களும் பலரது நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு கைத்தொலைபேசி, இணையம், கணனி விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஒருவர் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகின்றார் என்பது பற்றி பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவை அதிர்ச்சி தரும் பல தகவல்களைச் சொல்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் ஒருவருக்கு நேரம் பற்றிய பொறுப்புணர்வு – விழிப்புணர்வு இல்லாவிட்டால் அவர் இன்றைய நவீன தொடர்புசாதனங்களினால் அலைக்கழிக்கப்பட்டு – அள்ளிச்செல்லப்பட்டு வாழ்க்கையை சூனியமாக்கிக்கொள்வார். இது தனக்குத்தானே தீ மூட்டுகின்ற விபரீதச் செயலாகும்.

“நேற்று என்பது இரத்து செய்த காசோலை. நாளை என்பது வாக்குறுதிச் சீட்டு இன்று என்பது உடனடி ரொக்கம்” என்பார்கள். உடனடி ரொக்கமாக (பணமாக) நமது கையில் உள்ள இன்றைய பொழுதை நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்?

நிறைவாக

நேரத்தை நிர்வகிப்பது மிகப்பபெரிய கலை. நேர முகாமைத்துவம் என்பது நமது பொறுப்புணர்வின் – ஒழுக்கத்தின் வெளிப்பாடு. நமது நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வாழ்வின் வெற்றி தங்கியிருக்கிறது. பொறுப்பற்றவர்கள் அலட்சிய மனப்பான்மை கொண்டவர்கள் தமது நடவடிக்கைகள் எல்லாவற்றிலுமே அலட்சியப்போக்கையே கொண்டிருப்பார்கள். நேர விடயத்திலும் அவர்கள் பொறுப்பற்றவர்களாகவே இருப்பார்கள். நேரத்தைக் கோட்டைவிட்டவன் வாழ்வையே கோட்டைவிட்டவனாகிறான்!